Showing posts with label என் கிராமம்.. Show all posts
Showing posts with label என் கிராமம்.. Show all posts

Thursday, March 3, 2022

குபந்தி (Physalis minima)

குபந்தி, எத்தனை பேர் இந்த பெயரை கேள்விபட்டிருக்கின்றீர்கள். நான் இன்று தான் இந்த பெயரை கேள்விபடுக்கிறேன். இது ஒரு செடியின் பெயர். இந்த பெயரைத்தான் இப்போ கேள்விப்படுகிறேனே தவிர, எனக்கு இந்த செடி சிறுவயது முதல் பரிச்சயமானது.

எங்கள் பகுதியில் இதனை சொடக்கு தக்காளி என்று தான் சொல்வோம். இதன் காய்/பழத்தை சுற்றி ஒரு பேப்பர் போன்ற அமைப்பு இருக்கும். அதன் கீழ் பகுதி திறந்திருக்கும். அதனை இருக்கமாக மூடினால் பலூனில் காத்து அடைத்திருப்பது போன்று இருக்கும். அதனை நெற்றியில்/தலையில் அடித்தால் பட் என்று சொடக்கு அடிப்பது போன்று சத்தம் வரும். அதனால் தான் இதன் காரணப் பெயர் சொடக்கு தக்காளி. இதன் உள்ளிருக்கும் பழம் ஒரு இலந்தை பழம் அளவுக்கு சிறியதாக தான் இருக்கும். ஆனால் தக்காளி போன்று சாறுடன் விதைகள் நிரம்பி இருக்கும். இதனை சாப்பிடலாம்.

என்னுடைய கிராமத்தில் வீட்டை சுற்றி இந்த செடி நிறைய வளர்ந்திருக்கும். இதன் பழத்தை சுற்றி பேப்பர் போன்று பச்சை நிறத்தில் ஒரு அமைப்பு இருக்கும் என்றேன் அல்லவா? அது சிறிது கடினமாக இருக்கும். ஆனால் இதனை பறித்து கைகள்/விரல்களுக்குள் வைத்து மென்மையாக கசக்கினால்(உள்ளிருக்கும் பழத்திற்கு பங்கம் வராமல்) அந்த சுற்றியிருக்கும் பகுதி மிருதுவாக மாறிவிடும். அதன் பின்னர் அந்த பகுதியை பிரட்டி போட்டால் அதாவது உள்ளிருக்கும் பழத்தை மெதுவாக வெளியே தள்ளி எடுத்துவிடலாம். அப்படி எடுத்தால் அந்த பழம் தலையாகவும், பேப்பர் பகுதி உடல் போன்றும் இருக்கும். அதற்கு கை/கால்கள் ஒட்டவைத்து விளையாடியதாக நினைவிருக்கிறது.

இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் சமீபத்தில் தைவானில் இருக்கும் மிகப்பெரிய காஸ்கோ கடைக்கு (costco) சென்றால் அங்கு பூக்கள் இருக்கும் பகுதியில் இந்த சொடக்கு தக்காளியையும் வைத்திருந்தார்கள்ஆனால் அதன் பழத்தின் அளவானது நம்ம ஊரைல் இருப்பதைவிட 2 அல்லது 3 மடங்கு அளவில் பெரியதாக‌ இருக்கிறது. இங்கு அல‌ங்காரத்திற்கு வாங்குகிறார்கள். விலையோ நம் ஊர் மதிப்பில்சுமார் ரூ500/‍.

அடடா சின்ன வயசில தேவையில்லாமல் இதனை கசக்கி கசக்கி சொடக்கு போட்டுட்டமே என்று யோசிச்சேன்.

Monday, December 15, 2014

திருகார்த்திகை தீபம்

  தென் தமிழகத்தில் திருகார்த்திகை என்றாலே இரண்டு விசயம் கண்டிப்பாக இருக்கும். முதலாவது கொழுக்கட்டை அதுவும் பனை ஓலையில் செய்த கொழுக்கட்டை. இரண்டாவது வீட்டை சுற்றி விளக்கு வைப்பது. கொஞ்சம் விடலை பசங்க இருந்தா மூன்றாவதாக சொக்க பனை.



  திருகார்த்திகை அன்று காலையில் எழுந்ததும் நமக்கு கொடுக்கிற முக்கியமான வேலையே எங்கேயாவது இரண்டு சருவை பனை ஓலை வாங்கிட்டு வந்துரு என்பது தான். ஒரு சருவை ஓலை என்பது ஒரு பனை மட்டையில் உள்ள ஓலையில் பாதிக்கும் கொஞ்சம் குறைவு. இரண்டு சருவை ஓலை என்றால் கிட்ட தட்ட முக்கால்வாசி ஓலை. ஆனால் ஒரே மட்டையில் இரண்டு சருவை ஓலையை வெட்டமாட்டார்கள். முத்தின ஓலையில் கொழுக்கட்டை செய்தால் கொழுக்கட்டையில் இலைவாசம் அதிகமாக இருக்கும். கொஞ்சம் குருத்தோலை அல்லது சமீபத்தில் வெளிவந்த ஓலை தான் வெட்ட வேண்டும். அப்படி பார்த்தால் அதிகபட்சமாம 4 ஓலை தான் தேரும். அதற்கு மேல் வெட்டினால் அது மரத்தை மொட்டை அடிப்பதற்கு சமம்

  எங்கள் ஊரில் அப்பாவும் பிள்ளையுமாக இரண்டு பேர்தான் பனையேருவார்கள். காத்தாலே அவங்க வீட்டுக்கு போய் அம்மா சருவை ஓலை கேட்டார்கள் என்று கேட்டால், தம்பி நீங்க சாயங்காலம் 3 மணிக்கு வாங்க அப்போ தான் ஓலை வெட்ட போவேன் என்று சொல்வார். எனக்கு இரண்டு சருவை ஓலை வேண்டும் என்று சொன்னால் எல்லோரும் கேக்கறாங்க, மரத்துல இருக்குறத தான் தரமுடியும். வாங்க பாப்போம் என்று பொடிமட்டையிலிருந்து கொஞ்சம் பொடியை எடுத்து பல்லில் தேய்த்தவாரே சொல்வார்.

  நான் படித்தது கிருஸ்தவ பள்ளிக்கூடம் என்றாலும் திருகார்த்திகைக்கு மதியத்துக்கு மேல் விடுமுறை விட்டுவிடுவார்கள். பள்ளியிலிருந்து சைக்கிளை மிதித்தால் நேரே அவரோட வீட்டில் தான் போய் நிற்கும். ஏற்கெனவே அங்கு பத்துக்கும் மேல் ஆட்கள் நிற்பார்கள். எங்க ஊரில் சர்கார் பனை மரங்கள் கொஞ்சம் உண்டு. அங்க போய் எந்த எந்த மரத்தில் வெட்டலாம் என்று முதலிலே கணக்கு பண்ணி ஒரு மரத்தில் ஏறுவார். நாங்கெல்லாம் பனை மரத்திலிருந்து கொஞ்சம் தள்ளி நின்று எப்போடா ஓலைய போடுவாரு என்று பாத்துக்கொண்டிருப்போம். அவர் மெதுவா மேலே ஏறி வாகா ஒரு மட்டைய புடிச்சி உச்சானிக்கு போய் நின்னுபார். அதுக்கப்புறம் எந்த ஓலைய அறுக்கலாம் என்று நோட்டம் விட்டு, காலை மற்றி மாற்றி ஒவ்வொரு மட்டையா தாண்டி ஓலை அறுக்கும் மட்டை கிட்ட வந்து எவ்வளவு வெட்டலாம் என்று பார்த்து தன்னிடம் இருக்கும் பாலை அரிவாளால் வாகா மேல வச்சி கீழ் நோக்கி லேசா ஒரு இழுப்பு இழுப்பார். ஒரு சருவை ஓலை சட்டுன்னு கீழ் நோக்கி வரும். அது கீழே விழுந்ததும் ஓடிப்போய் எடுத்துக்கிடனும். கொஞ்சம் பிந்தினாலும் அடுத்த ஆள் எடுத்துப்பாங்க. நானெல்லாம் எப்போ குருத்தோலைய வெட்டி போடுவாருன்னு பார்த்திக்கிட்டு நிப்பேன். அவர் குருத்தோலைய வெட்டுறது தெரிஞ்ச உடனே ஓடுறதுக்கு ரெடியா நின்னுப்பேன். அத மட்டும் கைல எடுத்து போடுவாரு. அண்ணா இந்த பக்கம் போடுங்க என்று சின்னதா ஒரு சத்தம் குடுத்தா சில நேரம் நம்மை நோக்கி வரும். நமக்கு வேண்டிய ஓலை கிடைத்ததும் அந்த இடத்தை காலிசெஞ்சிடனும்.

  ஓலைய கொடுத்தஉடனே நம்மள அத்தோட விடுவாங்களா என்றால் அது தான் கிடையாது. இதை கொஞ்சம் வெட்டி கொடுத்திட்டுபோ என்பார்கள். ஓலைய ஏடு பிரித்து (இரண்டு இலைகள் சேர்ந்து நீளமாக இருப்பது) முக்கால் அடி நீளத்துக்கு ஒரு தூண்டாக நறுக்கனும். நீளமான ஏட்டில் இரண்டு துண்டுகள் வரைக்கும் நறுக்கலாம். இல்லை என்றால் ஒன்று மட்டுமே. ஓலை கிழிந்துவிடாமல் கவனமாக வெட்டனும். மீதி இருக்குற கழிவு ஏட்டில் இருந்து கட்டுவதற்காக நூல் மாதிரி கிழித்து வைக்கனும்.

  பச்சரிசியை நனையவச்சி இடிச்சி பெருங்கண் சல்லடையாள் (மாவு பரபரன்னு இருக்கும்) சலிச்சி வச்சிக்கனும். கிராமங்களில் கொழுக்கட்டை முன்றுவித சுவைகளில் செய்வார்கள். சர்க்கரையில் (அச்சுவெல்லம்) செய்த கொழுக்கட்டை கொஞ்சம் வெளீரிய மஞ்சள் நிறத்தில் இருக்கும். சீனியில் செய்த கொழுக்கட்டை வெண்மையாக இருக்கும். கருப்பட்டியில் செய்தது கொஞ்சம் அடர் பிரவுன் நிறத்தில் இருக்கும். மூன்றின் சுவையும் வெவ்வேறானவை. இதற்கு மேலும் சுவைக்காக தேங்காய்பூ, சிறுபயத்தம் பருப்பு, ஏலக்காய் எல்லாம் சேர்துக்கலாம். இடித்தமாவோடு தேங்காய்ப்பூ, பயத்தம் பருப்பு, ஏலக்காய் சேர்த்து அதோடு சீனி, சர்க்கரை, கருப்பட்டியை தனித்தனியாக விரசி (கலந்து) கெட்டியா வச்சிப்பாங்க. கொஞ்சம் மாவு கலவையை எடுத்து நறுக்கி வைத்த பனை ஏட்டில் சரியாக மத்தியில் வைச்சி, இன்னொரு இலையால் மூடனும். மூடினதும் நூல் போல் கிழித்துவைத்திருந்த பனை இலக்கை (ஒலை) வைத்து கட்டி தனியாக வைக்கனும். இதுல கொஞ்சம் டெக்னிக்கல் விசயம் எல்லாம் இருக்கு. மாவுக்கலவையில் நிறைய நீர் விடக்கூடாது. அடுத்து ஓலையில் மாவும் நிறைய வைக்க கூடாது. கட்டிய ஓலையை நீராவியில் போட்டு வேக வைக்கும் பொழுது அதனுளிருக்கும் சர்க்கரை, சீனி, கருப்பட்டி மூன்றும் உருக ஆரம்பிக்கும் அப்பொழுது மாவோடு சேர்ந்து இரண்டு பக்கமும் சிறிது தூரம் ஓடும். அதிகமான மாவும், அதிகமான தண்ணீரும் மாவை ஓலையை விட்டு வெளியே தள்ளிவிடும். மாவு வைத்து கொடுக்கும் வேலைக்கு என்னைய கூப்பிட மாட்டாங்க. நமக்கு கையும் வாயும் சும்மா இருக்காது. வச்சிமுடிக்கிறதுக்குள்ள கால்வாசி மாவு காணாம போய்டும். எனக்கு கொடுக்குற டிபார்ட்மெண்ட், மாவு ஓலைய இன்னொரு ஒலைய வச்சி மூடி கட்டு போடறது தான். எல்லா ஓலையையும் வச்சி கட்டி முடிச்சதும் மீதி ஏதாவது மாவு இருந்தா அதில் மா(வு)விளக்கு வைப்பார்கள்.


  இரண்டடி  உயரம் உள்ள ஒரு பானைய எடுத்து அதுக்குள்ள வைக்கிற கொழுக்கட்டை ஓலை கீழே இறங்காம இருக்க கால்வாசி பானையில சிறிய கம்பு வைத்து ஊடுகட்டி, அதுக்குள்ள நறுக்கி உபயோகமில்லாமல் போன ஓலைய போட்டு பரப்பி, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, கொழுக்கட்டை ஓலைய அடுக்கி வச்சி துணிய வச்சி வண்டுகட்டி அதுக்கு மேல ஒரு மூடிய போட்டு அடுப்பில் வச்சிட்டா, நீராவியிலே வெந்துடும். வெந்ததும் ஓலைய பிரிச்சி கொழுக்கட்டைய உடைஞ்சிடாம தனியா எடுத்து ஒரு தட்டில் வச்சி முதல்ல சாமிக்கும், பிறகு முன்னோருக்கும் படச்சிட்டு, ஆசாமிகிட்ட நீட்டுனா உடனே காலியாயிடும். பொதுவா கொழுக்கட்டைய அடுத்தநாள் சாப்பிட்டா சுவை அதிகமா இருக்கும்.

 இந்த வேலை நடந்துக்கிட்டு இருக்குறப்பவே, இன்னொருபக்கமாக வீட்டை அலங்காரம் செய்யும் வேலையும் நடக்கும். வேற ஒன்னும் இல்ல வீட்டுக்குள்ள அங்க அங்க மாக்கோலம் போட்டு வைப்பாங்க. இந்த மாக்கோலம் போடுறது கூட ஒரு கலை தான். பச்சரிசிய ஊறவச்சி அம்மியில மை போல அரைக்கனும் கூடவே கொஞ்சம் மஞ்சளும், நிறத்திற்காக. மை போல அரச்ச அரிசியில நீர் சேர்த்து கொஞ்சம் கட்டியாவும் கட்டியா இல்லாத மாதிரியும் கலக்கி வச்சிக்குவாங்க. சிறிய வெள்ளை துணியை எடுத்து இந்த கலவையில முக்கி பெருவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் பிடித்து கோலம் போடனும். இந்த கோலம் ஒரு ரெண்டு வாரத்துக்கும் மேலே அழியாம இருக்கும். அதுக்கு அப்புறமும் கோலம் போட்ட தடம் அந்த இடத்தில் இருக்கும். அடுத்து பப்பாளி மரத்தில் இருந்து நல்ல இளம் பிச்சி இலையா ஒரு இலைய பறிச்சி இலையும் காம்பும் சேரும் இடத்துல சின்ன அளவு வட்டமா வெட்டிக்கிட்டு, நரம்பு தவிர உள்ள இருக்குற பச்சை இலையை வெட்டி எடுத்துக்கணும். இது எதுக்குன்னு கேக்கறியலா, இத அப்படியே அந்த கலைவையில தொட்டு கதவில் ஒரு அமுத்து அமுத்தி எடுத்தா கதவில் ஒரு நட்சத்திரம் இருக்குற மாதிரி தெரியும். அதுக்கு நடுவுல ஒரு குங்கும பொட்டு. இப்படி கதவுல நல்லா இடம் விட்டு வச்சா பார்க்க அழகா இருக்கும். எங்க வீட்டுல எல்லா கதவையும் இந்த மாதிரி அலங்காரம் செய்யவேண்டியது என்வேலை. கதவு நிலைக்கு எங்க அம்மா கையில மாவை எடுத்து ஒரு பட்டை போடுவாங்க அதுக்கு நடுவுல நான் ஒரு குங்கும பொட்டை வைக்கனும் அவளோ தான். இது முடிஞ்சதும் முன்வாசல், வராண்டா, தார்சா என்று எல்லா இடத்திலும் அகல் விளக்கு (மெழுகுவர்த்தி) பொருத்தி வச்சிட்டா கார்த்திகை தீப அலங்காரம் முடிஞ்சிது.

அடுத்தது சொக்கப்பனை. நல்லா இருட்டுனதும் ஊருல இருக்குற கோவிலுக்கு முன்னாடி சொக்க பனை ஏத்தனும். ஒரு 8 அடி நீளமான கம்பு அல்லது தென்னம்மட்டைய ஒலை இல்லாம எடுத்துக்கனும். காய்ந்த பனை ஓலைய கொய்து (சின்ன சின்னதா நீளவாக்கில்) வச்சிக்கனும். இப்போ பனை ஒலையை தென்னமட்டையில வச்சி கட்டணும். முதல் கட்டு உச்சியில வச்சி கட்டணும். அடுத்த கெட்டு அதுக்கு அடியில வச்சி கெட்டனும். கிட்ட தட்ட பூ இதழ் இருக்குமே அதுமாதிரி ஒரு ஒரு வட்டமா வச்சி கீழ ஒரு 2 அடி இடம் விட்டுட்டு கட்டணும். அப்படி கட்டும் போது நடு நடுவுல சில்லாட்டைய (பனை மட்டையின் கீழ் வலை போன்று மரத்தை கவ்வி பிடிக்க இருக்கும் ஒரு அமைப்பு) வச்சிக்கனும் கூடவே கொஞ்சம் உப்பு. இதை ரொம்ப இருக்கி கெட்ட கூடாது. கட்டுன மாதிரியும் இருக்கனும், கட்டாத மாதிரியும் இருக்கனும். இத எங்கூரு பிள்ளையார் கோவில் முன்னாடி சின்னதா குழி தோண்டி நிக்கவைக்சிர வேண்டியதுதான். 7 மணிக்கு கோவில் பூசை முடிஞ்சதும் பூசாரி ஒரு கற்பூரத்தை கொளுத்தி நீட்டுவார், அதுல இன்னொரு ஓலைய (கைப்பந்தம்) நீட்டி தீ வாங்கி அப்படியே நட்டு வச்சிருக்க சொக்க பனையின் மேல் பாகத்தில் (உச்சியில) நெருப்ப வச்சிடனும். மெதுவா எரிஞ்சிகிட்டே வரும். நாம் உப்பு போட்டு வச்சிருப்போமே அங்க வந்ததும் இந்த உப்பு  எல்லாம் வெடிக்க ஆரம்பிக்கும் அது வெடிக்கும் போது இதுவரைக்கும் எரிஞ்சி கனகனன்னு இருக்கும் ஒலை எல்லாம் நெருப்பு பொரியா பறக்கும். அடுத்து சில்லாட்டை வர்ர இடமும் அப்படி நெருப்பு பொரி பறக்கும். கும்மிருட்டுள சொக்கபனை மட்டும் எரியும் அப்போ அப்போ நெருப்பு பொரி (புஸ்வானம்) பறக்கும். பார்க்கறதுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும். சின்ன பசங்க எல்லாம் கார்த்திகை மாசம் சிவ்வோடோ சிவ்வன்னு சத்தம் போடுவாங்க. இந்த சிவ்வக்கு என்ன அர்த்தமின்னு என்ன கேட்டுறாதீங்க. எனக்கும் இதுவரைக்கும் அர்த்தம் தெரியாது.


எங்க தாத்தா-பூட்டன் காலத்துல பாதி பனைமரத்த வெட்டி வச்சி எரிப்பாங்களாம், ராத்திரி பூரா நின்னு எரியுமாம். இப்படி பனைய வெட்டி எரிச்சதால இதற்கு பெயர் சொக்கபனை. சொக்கன் பனை என்பது மருவி சொக்கப்பனை ஆகியிருக்கவும் வாய்ப்பிருக்கு. என்னோட சின்ன வயசுல பனைக்கு பதிலா பனை ஓலை வச்சி கொளுத்துனோம். இப்போ ஒரு பனை இலைக்கை (ஓலையில் ஒரு இலை) கூட கொழுத்த முடியாது. ஏன்னா இப்போ பனைமரமே இல்லப்பா!



குறிப்பு : அடுத்தநாள் காலையிலே கொழுக்கட்டை பரிமாற்றங்கள் வேறு நடக்கும். சுற்றத்தார் வீட்டுக்கு கொடுக்குறதும் அவங்க நமக்கு கொடுக்கறதும், ஏன் இவங்க வீட்டுல கொலுக்கட்ட இவ்வளவு சின்னதா இருக்கு, ஏன் இனிப்பே இல்லை, ஏன் இவ்ளோ இனிப்பு போட்டுருக்காங்க, இந்த கொழுக்கட்டைய கடிக்க முடியலேயேபல்லு போய்டும் போல இருக்கு என்று எல்லார் வீட்டிலும் அங்கலாச்சிக்குவாங்க. அது ஒரு தனிக்கதை.

படங்கள் உதவி : கூகுளாண்டவர்

Monday, December 23, 2013

மார்கழி திங்கள்

"மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்நாளாம்" என்று பாட்டு பாடும் மார்கழி மாதம் ஆரம்பித்து விட்டது. எனது சிறுவயது மார்கழி மாத அனுபவம் பக்தி பரவசமாகவே கழிந்தது.

எனக்கு அப்பொழுது 10 வயது இருக்கும். எங்கள் ஊரில் முதன் முதலில் மார்கழி மாதத்து பஜனை ஆரம்பித்தார்கள். காலை 4:30 மணிக்கு பஜனை ஆரம்பிக்கும் என்று முதல் நாளே சொல்லிவிட்டார்கள். அப்பொழுது எங்கள் ஊர் அம்மன் கோவிலுக்கு சொந்தமாக மைக்-செட் கிடையாது. வாடகைதான். எங்கள் ஊர் சுடலைமணி அண்ணனோ அல்லது பாஸ்கர் அண்ணனோ தான் மைக் செட் கட்டி இருந்தார்கள். மார்கழி மாதத்தின் முதல் நாள் விடிய காலம் மூன்றரைக்கு ரேடியோ குழாய் "வினாயகனே வினை தீர்ப்பவனே" என்று சத்தமாக பாட ஆரம்பித்தது. திடுக்கிட்டு முழித்து அதன் பின்னர் பஜனையை நினைத்து மனமானது சமாதனமாகியது. கடும் குளிர். வீட்டில் வெண்ணீர் வைத்து கொடுத்தார்கள். அதிகாலை வெண்ணீர் குளியல் உடம்புக்கு இதமாக இருந்தாளும் குளித்து முடித்ததும் பற்கள் தன்னாலே தந்தி அடிக்க ஆரம்பித்தது.
 
எனக்கு முன்னரே கோவிலில் நிறைய பசங்க வந்து நெத்தியில் பட்டை போட்டு, சந்தணம், குங்குமம் வைத்து ரெடியாக இருந்தார்கள். பக்கத்து ஊரில் இருந்து அந்தோணி புலவர் வந்திருந்தார். அவர் ஒரு வில்லு பாட்டு கலைஞர், புலவர். அவர்தான் எங்களுக்கு பாடல் சொல்லிகொடுக்க போகிறார் என்று சொன்னார்கள். எங்கள் ஊரை சேர்ந்த ஒருவர் இரன்டு சிங்கி(ஜால்ரா) உபயம் செய்திருந்தார்கள். அதனை கொஞ்சம் பெரிய பசங்க எடுத்து கொண்டார்கள். ஒருவர் தாம்பாள தட்டு எடுத்துக்கொண்டார். அதில் நிறைய திருநீரும், சூடகமும் இருந்தது. அதில் ஒரு சூடகத்தை தட்டின் ஒரு ஓரத்தில் கொளுத்தி விட்டார்கள். ஒரு சிலரின் கைகளில் திருப்பாவை பாடல் அடங்கிய ஒரு புத்தகம் கொடுத்தார்கள். எனக்கும் ஒன்று கிடைத்தது.
 
எங்கள் ஊர் கோவிலில் ஒரு பெட்ரமாஸ் லைட் இருக்கும். கொஞ்சம் பழசு என்றாலும் இன்று வரைக்கும் நன்றாகவே எரிந்து கொண்டிருக்கிறது. அப்பொழுதெல்லாம் எங்கள் ஊரில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரிரு மின்சார விளக்குகள் தெருவில் எரிந்து கொண்டிருக்கும். நிறைய தெருக்கள் கும்மிருட்டாகவே இருக்கும். பெட்ரமாஸ் லைட் தான் துணை. அதனை ஒருவர் எடுத்துக்கொண்டார். என்னை அந்தோணி புலவரின் அருகே வரச்சொன்னார்கள்.
 
"மார்கழி திங்கள்" என்று முதல் வரியை அந்தோணி புலவர் பாட, பின்னாடி நாங்கள் அனைவரும் "மார்கழி திங்கள்" என்று பின் பாட்டு பாட ஆரம்பித்தோம். எங்கள் ஊர் மார்கழி மாதத்து பஜனை இப்படித்தான் ஆரம்பித்தது. 30 பாடலும் ஒரே ராகம், புலவர் பாட நாங்கள் பின் பாட்டு பாடவேண்டும். 10 நாட்கள் கழித்ததும், பசங்க எல்லாம் நன்றாக பாடுவதற்கு கத்துக்கொண்டார்கள்(!). இனிமேல் அவர்கள் தனியாகவே பாடுவார்கள் என்று கூறி வர மறுத்துவிட்டார். அவரொட ஊர் பஜனையும் அவர் தான் பார்த்துக்கொண்டார். அவரால் இரண்டு ஊரையும் சமாளிக்க முடியவில்லை.
 
அதன் பின்னர் வேறு ஒருவர் பாடல் சொல்லிகொடுத்தார். அதே வருடமே நானும் சொல்லிக்கொடுக்கும் படி ஆனது. அதன் பின்னர் நான் கல்லூரி செல்லும் வரை சொல்லிகொடுத்தேன். நண்பன் நந்தகுமார் தாம்பாள(திருநீரு)தட்டு இன்சார்ஜ் எடுத்துக்கொண்டான்.

முத்தாரம்மன் கோவில் வாசலில் அமிர்தன்
பொதுவாக ஜால்ரா தட்டுபவர்களை "ஜிங்-ஜக்" என்று கிண்டல் செய்வோம். அது தவறான தட்டுதல் முறை என்று எங்களை திருத்தி "ஜிங்-ஜிங்-ஜக்" என்று ஒலி வரும் படி மாற்றி ஜால்ரா அடிக்க சொல்லிக்கொடுத்தவர் அந்தோணி புலவர் தான். எத்தனை பேர் ஜால்ரா அடித்தாலும் ஒரே தாள கதியில் அந்த ஒலி வரும். பிசுறு தட்டாமல் கேட்கலாம். (இங்கு ஜால்ரா என்ற வாத்தியத்தை நேரடியாக சொல்கிறேன். வேறு அர்த்தம் எடுத்தால் கம்பெனி பொறுப்பல்ல.)
 
காலை 4:30 மணிக்கே பஜனை பாடி தெருக்களில் சென்றாலும், கிராமத்து பெண்கள் அதற்கு முன்னரே சாணி தெளித்து வீட்டு முற்றத்தில் அருமையான கோலம் போட்டிருப்பார்கள். மாக்கோலம், புள்ளி வைத்த கோலம், ரங்கோலி என்று வித விதமான கோலம் போட்டு அதன் நடுவில் ஒரு சாணி உருண்டை வைத்து அதன் மீது ஒரு பூவர்சம் பூ வைத்திருப்பார்கள். அந்த இருட்டிலும் அதனை அழித்துவிடாது பதனமாக போக வேண்டும். தப்பி தவறி அழித்துவிட்டால் அப்பொழுது ஒன்றும் சொல்ல மட்டார்கள். காலையில் தெருவில் பார்த்தால் சரியான மண்டக்கப்படி கிடைக்கும்.

சிலர் வீட்டில் பஜனை பாடி வருபவர்களுக்கு கருப்பட்டி காப்பி போட்டு தருவார்கள். கூடவே முறுக்கு, மிக்சர் என்றும் சிலர் வீட்டில் கொடுப்பார்கள். அதனை பஜனை பாடி வருபவர்களுக்கு ஒரு சேவையாக(?) செய்தார்கள். அடியார்க்கு அடியார் சேவை போன்று.
 
கோவிலில் தினமும் சர்கரை பொங்கல் போடுவார்கள். சில நாட்கள் யாராவது நேமிசம் செய்வார்கள். அப்பொழுது பொங்கல், சுண்டல், பழம், தேங்காய் என்று பிரமாண்டமாய் இருக்கும். சம பங்கீடு என்பதை நான் கற்றுக்கொண்ட இடம் எங்கள் ஊர் கோவில் தான். 10 வாழை பழத்தை 10 பேருக்கு பங்கு வைக்கவும், ஒரே ஒரு வாழை பழத்தை 10 பேருக்கு பங்கு வைக்கவும் கற்றுக்கொடுத்த இடம். இன்னும் சிலர் இருக்கின்றார்கள், ஒரே ஒரு வாழை பழத்தை 20 பேருக்கு கூட பங்கு வைப்பார்கள், சிப்ஸ்க்கு சீவுவதை விட மெலிதாக சீவுவார்கள். கோவில்லுக்கு வந்த யாரும் இல்லை என்று போகக்கூடாது என்ற பரந்த மன‌ப்பான்மை.
 
பஜனை ஆரம்பிதத 20 நாட்களுக்குள் வெளிச்சமில்லாமல் இருட்டில் கூட பஜனை பாடிக்கொண்டு செல்லும் அளவுக்கு எங்கள் அனைவருக்கும் திருப்பாவை மனப்பாடமாக தெரிந்திருந்தது. எங்கள் ஊர் ஒரு சிறிய கிராமம் என்பதால் 30 வது பாடல் சரியாக கோவிலில் முடியும் படி இருக்கும்.
 
மாலையானால் ஒரு மைக் வைத்து எல்லோரும் கோவிலிலே தனி ஆவர்தனமும் செய்ததுண்டு. யார் நன்றாக பாடுவது! யார் புதிய பாடல்களை எல்லாம் பாடுகின்றார்கள்! என்று போட்டியே கூட இருக்கும். எங்கள் ஊரிலே ராணி அக்காவுக்கு ஒருவருக்கு தான் அருணகிரி நாதரின் "முத்தை தரு பத்தி" பாடல் பாடத்தெரியும். அவர்கள் எப்பொழுதாவது பாட வந்தால் மைக்கை அவரிடம் கொடுத்துவிட்டு அந்த பாடலை பாட சொல்லி கேட்போம். முத்தம்மை பாட்டி நிறைய கும்மிபாட்டு சொல்லிகொடுப்பார்கள். பாட்டி பாடுவது ஒரு விதமான ராகத்தில் கேட்க இனிமையாக இருக்கும். பாட்டி நல்ல கதை சொல்லி கூட. எங்கள் வீட்டில் இரண்டு நோட்டு புத்தகம் நிறைய பக்தி பாடல்கள் இருந்தது. என்னுடைய சிறுவயதில் அனைத்து பாடல்களையும் பாடியிருக்கின்றேன்.
 
சரி இந்த பழங்கதை எல்லாம் இப்போ எதுக்கு என்கின்றீர்களா?
 
மார்கழி மாதம் ஆரம்பித்ததும் பழைய நினைவுகளின் தாக்கத்தால் "மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்நாளாம்" என்று பாட ஆரம்பித்தேன். "தயவு செஞ்சி நிறுத்துங்கள். கழுதை கூட கொஞ்சம் ராகமா கத்தும்" என்று பின்னாடி இருந்து ஒரு குரல் கேட்டது. "Daddy you scared me" என்று பின்னாடியே ஒரு எசப்பாட்டு வேறு.
 
வாயை மூடிக்கொண்டே யோசிக்க ஆரம்பித்தேன்.
 
நம்ம வாய்ஸ் அவ்ளோளோளோ மோசவா இருக்கு..................!!!!!?