Showing posts with label Phnom Penh. Show all posts
Showing posts with label Phnom Penh. Show all posts

Wednesday, March 9, 2016

கம்போடியா -3, நாம் பென் (Cambodia - Phnom Penh)

   கம்போடியாவின் மிக முக்கியமான நீராதாரங்களில் மேக்காங் ஆறும் ஒன்று. உலகின் மிக நீளமான ஆறுகளில் 12 ஆம் இடத்தில் இருக்கிறது, ஆசியாவில் ஏழாம் இடத்தில் உள்ளது. இதனுடைய தொடக்கம் திபெத்தியன் பீடபூமி. சீனாவில் இருந்து புறப்பட்டு மியான்மர்(பர்மா), லாவோஸ் மற்றும் தாய்லாந்து நாடுகளின் வழியாக ஓடி கம்போடியாவினுல் நுளைகிறது. கம்போடியாவின் குறுக்காக ஒடி வியட்நாமின் கோசிமின் பகுதி வழியாக சுமாராக 4350 கிலோமீட்டர் தூரம் கடந்து சீனக்கடலில் கலக்குறது. இதனுடைய துனை ஆறுகள் எல்லாவற்றிலும் இருந்து வந்து சேருகின்ற நீரினால் எப்பொழுதும் நிறைந்து ஓடுகின்றது. இந்த ஆற்றில் சிறிய அளவினால் ஆன சரக்கு கப்பல்கள் செல்கின்றது. லாவோஸ், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் கம்போடியா சேர்ந்து கூட்டமைப்பு ஏற்படுத்தி இதனை செய்கிறார்கள். இரவில் கூட இந்த ஆற்றின் வழியாக கப்பல்கள் செல்வதை பார்க்க முடிகிறது.
மேக்காங் ஆற்றில் செல்லும் சரக்கு கப்பல்

   கம்போடிய மன்னரின் அரண்மனை மேக்காங் ஆற்றின் கரையோரமாக இருக்கிறது. தலைநகர் நாம்பென் அதனை சுற்றியே கட்டமைக்கப்பட்டுள்ளது. அரண்மனையை சுற்றிலும் கேளிக்கை விடுதிகள் இரவு விடுதிகள் மற்றும் உணவகங்கள் என்று ஒரு சுற்றுலா மையம் போல் வைத்திருக்கிறார்கள். அரண்மனை காலை 8 மணிக்கு திறந்து மாலை 5 மணிக்கு மூடிவிடுகிறார்கள். அரண்மனையில் இன்னும் மன்னர் பரம்பரையினர் வசிக்கின்றனர். உள்ளே சென்று அரண்மனையின் சில பகுதிகளை பார்வையிடலாம். நுளைவுக்கட்டனம் 3USD புகைப்படக்கருவியை கொண்டு செல்ல 2USD. நேரம் ஒத்துழைக்காமையால் உள்ளே சென்று பார்க்கமுடியவில்லை. நம் ஊரினை போன்றே அரண்மனைக்கு முன்னர்  மன்னரின் நிழற்படத்தினை கட்டவுட் போன்று  பிரமாண்டமாக வைத்து மின் விளக்குகளால் அலங்கரித்திரிக்கிறார்கள். அரண்மனை முகப்பு வாயில் கோபுரத்தில் தற்பொழுதைய ராணியின் படம் அலங்கரிக்கிறது. அரண்மணை பக்கத்திலே அருங்காட்சியகமும் இருக்கிறது.

மன்னரின் நிழற்படம் அலங்கார வளைவு
அரண்மனை முகப்பு வாயில்
  கம்போடியாவில் நிறைய பனைமரம் இருக்கிறது. அரண்மனை வளாகத்திற்குள்ளும் சில மரங்கள் நிற்கின்றன. நம் ஊராக இருந்தால் வெட்டி போட்டிருப்பார்கள். ஆனால் அரண்மனையில் உள்ள மரத்தின் மத்திய பகுதியில் வலை போன்ற ஒரு இரும்பு அமைப்பை வட்டமாக மாட்டிவைத்திருக்கிறார்கள். பனை மரத்தில் இருந்து எது விழுந்தாலும் அந்த வலையில் மட்டுமே விழும். தகுந்த பாதுகாப்பு செய்து பனை மரத்தை வெட்டாமல் வைத்திருக்கிறார்கள். வாழ்க கம்போடியா...!

அரண்மனை வளாக பனைமரமும் அதில் உள்ள இரும்பு வலை அமைப்பும்

  ஆற்றங்கரையிலே சிறிது தூரம் நடந்துவந்தால் இரண்டு பேர் குதிரையில் செல்வது போன்ற சிலை இருக்கிறது(Techo Meas and Techo Yot Statue). இவர்கள் இருவரும் 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டின் சிறந்த கம்போடிய தளபதிகள். அவர்களின் நினைவாக கம்போடிய அரசு இந்த சிலையை வடிவமைத்திருக்கிறார்கள். அதை தாண்டி சிறிது தூரம் சென்றால் உன்னலும் கோவில்(WAT unnalom) ப‌கோடா இருக்கிறது. எல்லா கோவிலும் காலை 8 முதல் மாலை 5 வரைக்குமே திறந்திருக்கின்றன.
Techo Meas and Techo Yot Statue
 
WAT unnalom
   அப்படியே ஆற்றங்கரையை விட்டு சிறிது உட்பக்கமாக சென்றால் இரவு சந்தை இருக்கிறது. கம்போடியாவில் இரவு சந்தை மாலை 6 மணிக்கு கூடி இரவு 10 மணியோடு முடிகிறது. நாங்கள் செல்லும் பொழுது நடுவில் இருந்த மேடையில் சந்தைக்கு வந்திருந்த கம்போடியன் ஒருவர் பாடிகொண்டிருந்தார். யார் வேண்டும் என்றாலும் போய் பாடலாம். இங்குள்ள சந்தையில் துணிகள் தான் அதிகம் இருக்கிறது.
இரவு சந்தை

தாய்சீ ஸ்வார்ட் பயிற்சி செய்யும் வெளிநாட்டவர் ‍- மேக்காங் ஆற்றங்கரை
     கம்போடியாவில் இருந்த வரையிலும் உணவுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. அரண்மனையை சுற்றிலும் ஐந்துக்கும் அதிகமான இந்திய உணவகங்கள் இருக்கிறது. அனைத்து உணவகங்களும் பொதுவான ஒரு வலைதளத்தில் தங்களுடைய உணவு வகைகளை விலையோடு பட்டியலிட்டிருக்கிறார்கள். அதனை பார்த்து தொலைபேசி வழியாக நமக்கு தேவையானவற்றை பட்டியலிட்டால் போதும் அடுத்த அரை மணிக்குள் நம்மை தேடி வந்து கொடுக்கிறர்கள். குறைந்த பட்சமாக 5USD-க்கு ஆர்டர் இருக்க வேண்டும். நான் எப்பொழுதும் "வணக்கம் இந்தியா" என்ற உணவகத்திலே ஆர்டர் செய்தேன். அதன் முதலாளி ஒரு மலையாளி, தமிழும் பேசுவார். அதனால் என் தேவைகேற்ற மாதிரி சுவையில் மாற்றம் செய்து கொடுத்தார்.
நாம்பென் அருங்காட்சியகம்


  தலைநகர் நாம்பென்னில் ஒரு இடம் இருக்கிறது. அது ஒரு கொலைக்களம். அங்கு போனால் நிறைய மண்டை ஓட்டை பார்க்காலாம். சுமார் 2 மில்லியன் (20 லட்சம்) மக்களை கொலைசெய்த புதைத்த இடம். இப்பொழுது காட்சியகமாக மாற்றிவைத்திருக்கிறார்கள். இதை பற்றிய கதையை நண்பர் சீதா சொன்னார். கம்போடியாவில் ஏழை குடும்பத்தில் பிறந்த "போல் பாட்" என்பவர் ஃப்ரான்சு நாட்டிற்கு படிக்க செல்கிறார். அங்கு கம்யூனிசத்தின்பால் ஈர்ப்பு ஏற்பட்டு நான்கைந்து பேர் சேர்ந்து ஒரு அமைப்பை ஏற்படுத்துகிறார்கள். படிப்பு முடிந்து நாட்டிற்கு திரும்பிய போல் பாட் அரசியலில் ஈடுபடுக்றார். ஒரு கட்டத்தில் அவர்கள் தங்களுக்கு வேண்டாதவர்களை கடத்தி கொலைசெய்கிறார்கள். சிறிய அளவில் ஆரம்பித்த இந்த நிலை நாளைடைவில் வளர்ந்து தனிப்பட்ட விரோதத்தில் இருந்தவர்களையும் கடத்தி கொலைசெய்கிறார்கள். மேலும் பக்கத்து நாட்டில் இருந்து வந்து கம்போடியாவில் இருந்தவர்களையும் குறிப்பாக வியட்நாம், லாவோஸ், சீன மக்களை இனவழிப்பு செய்திருக்கிறார்கள். இந்த விளையாட்டு சுமார் 5 ஆண்டுகாலம் நடந்திருக்கிறது. மன்னரின் நண்பரும் நாட்டின் தளபதியுமாக இருந்தவர் இந்த கலவரத்தை திறம்பட அடக்கி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறார். பின்னர் அவரையே பிரதமராக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அப்படி கொலை செய்து மொத்தமாக புதைத்த இடத்தை தற்பொழுது அகழாராச்சி செய்து மண்டையோடுகளை எடுத்து அடுக்கி வைத்திருக்கிறார்கள். வலைதளத்தில் "killing fields cambodia" என்று தட்டச்சு செய்து தேடினால் நிறைய படங்கள் வருகிறது.

   அந்த கொலைகளத்தை போய் பார்க்கலாம் வாங்க என்று இளங்கோ அழைத்தார். ஊருக்கு வெளியே இருக்குற சுடுகாட்டு பக்கம் போகனுமின்னாலே ஒரு தடவைக்கு பத்துதடவ யோசிப்பேன். 20 லட்சம் பேரை கதற கதற கொன்று புதைத்த இடத்துக்கு போறதுக்கு எனக்கு என்ன தலையெழுத்தா! முடியாதுன்னு சொல்லிட்டேன்.


என்னோட டார்கெட்ல இருந்தது ஆங்கர் வாட் மட்டுமே.

Wednesday, February 17, 2016

கம்போடியா -2, நாம் பென் (Cambodia - Phnom Penh)


   
கம்போடியாவின் தேசிய விலங்கு
அடுத்த நாள் காலை 6 மணிக்கு எழுந்து பக்கத்தில் இருக்கும் பகோடாவை சுற்றிப்பார்த்தேன். முதல் பாகத்தில் சொன்னது போல் இது ஒரு செயற்கை குன்று. நான்கு பக்கமும் மேலே செல்வதற்கு பாதை இருக்கிறது. எந்த பக்கம் முன் வாசல் என்று தெரியவில்லை. சிறிய சங்கிலி கொண்டு சுற்றி பாதுகாப்பு செய்திருக்கிறார்கள். ஒரு பக்கம் சிலர் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்வதற்கு ஆயத்தம் செய்துகொண்டிருந்தார்கள். அவர்களை தாண்டி கொஞ்ச தூரம் சென்றதும் படிக்கட்டு தெரிந்தது. படிக்கட்டின் முகப்பில் ஏழு தலையை விரித்துக்கொண்டு இரண்டு பக்கமும் நாகத்தின் சிலை இருந்தது. இதனை வாசுகி என்கிறார்கள். அது போல் சில இடங்களில் ஆதிசேஷன் என்கிறார்கள். கம்போடியாவில் நிறைய இடங்களில் வளாகங்களை சுற்றிலும் இதேபோன்ற பாம்பு சிலைகளை காவல் தெய்வமாக வைத்திருக்கிறார்கள்.  ஒரு சில புகைப்படம் எடுத்ததும் மேலே செல்வதற்கு முதல் படியில் காலை வைத்தேன். யாரோ கூப்பிடுவது போன்று இருந்தது. பகோடாவின் பாதுகாவலர் ஒருவர் எங்கிருந்தோ என்னை நோக்கிவந்து ஒரு டாலர் பணம் கேட்டார்.

வாட்நாம்
முந்தைய நாள் கேள்விபட்டதில் கோவில் கூட 8 மணிக்கு திறந்து 5 மணிக்கு மூடிவிடுவார்கள் என்பது தான். ஒரு மூடிய கோவிலை போய் பார்ப்பதற்கு 1 டாலர் பணம் கேட்டார். எனக்கு முன்னர் உள்ளூர் தம்பதி ஒன்று மேலே ஏறிசென்றனர். அவர்களிடன் எதுவும் கேட்கவில்லை. கிட்டதட்ட நான் மேலே ஏறுவதற்கு காத்திருந்து வந்தது போன்று இருந்தது. ஒரு டாலர் பணம் கொடுத்துவிட்டு மேலே சென்றேன்.

மேலே ஏறியதும் கண்களில் முதலில் தட்டுப்பட்டது கொடி மரம். நம் ஊரில் கோவில்களில் இருப்பது போன்ற கொடிமரம், அதன் மீது சேவல் போன்ற ஒரு உலோக அமைப்பு இருந்தது. மஞ்சள் நிற கொடி ஒன்று தொங்கி கொண்டிருன்டிருந்தது. கோவில் சிமெண்டால் கட்டியது போன்று இருந்தது. எங்கு பார்த்தாலும் சிவப்பு, மஞ்சல் நிறமாக இருந்ததால் அனுமானிக்க முடியவில்லை. கூரையானது ஓடு வேய்ந்தது. சுவற்றில் உருவம் செய்து கூரையை தாங்கி பிடிப்பது போன்று வடிவமைத்திருந்தார்கள். நம் ஊரில் யட்சிகளும் அரக்கர்களும் இரு கை கொண்டு எதையாவது தாங்கு வது போன்று ஒரு அமைப்பு.
கொடிமரம்

யாளி போன்ற அமைப்பு


கொடிமரத்துக்கு பக்கத்திலே ஒரு சிறிய ஓட்டு கூரைக்குள் மிகப்பெரிய மேளம் வைத்திருக்கிறார்கள். சீன‌, தைவான் நாடுகளில் இப்படி பட்ட பெரிய மேளங்களை வைத்து அதனை அடிப்பதற்காக சங்கிலியில் ஒரு கட்டையை கட்டி தொங்க விட்டிருப்பார்கள். அந்த சங்கிலியை இழுத்து விட்டால் கட்டை போய் மேளத்தின் தோல்பரப்பை அடித்துவிட்டு வரும். ஆனால் இங்கு அது போன்ற‌ எந்த அமைப்பும் இல்லை.
பகோடா( கோபுரம்)

பகோடா ‍(கோபுரம்)

ஒருவர் சிறிய பறவைகள் நிரம்பிய கூண்டை எடுத்து மேலே வந்தார். அதனை பறக்க விடுகிறேன், படம் எடுக்கிறாயா என்றார். வேண்டாம் என்று கோவிலின் பின்புறம் சென்றேன். வெள்ளை நிறமான வானுயர்ந்த‌ பகோடா ஒன்று கோவிலுக்கு பின்புறம் இருந்தது. அது ஒரு உள்ளீடற்ற கோபுரம். அதாவது அதனுல் செல்வதற்கு எந்த பாதையும் கிடையாது. ம்ற்றிலும் சிமெண்ட் கலவையை ஊற்றி செய்ததாக இருக்கலாம். எந்த வித வர்ணமும் பூசாமல் சிமெண்ட் நிறத்திலே வைத்திருக்கிறார்கள். அப்படியே சுற்றி முன்பும் வரவும் ஒரு பெரியவர் கோவில் கதவை திறக்கவும் சரியாக இருந்தது. என்னை உள்ளே வா என்று அழைத்தார். பெரிய அரங்கம் அதில் படுத்த வண்ணம் இரண்டு சிலைகளும் உட்கார்ந்தபடி இரு சிலைகளூம் இருந்தன. இந்த நான்குசிலைகளும் தான் 'பென்' பாட்டி கண்டெடுத்தவைகளாக இருக்க வேண்டும். பெரிய பெரிய மெழுகுவர்தியை ஏற்றி வைத்திருந்தார்கள். உள்சுவற்றில் சுவரோவியம் நிறைய இருந்தது. அதில் அந்த கால தண்டனை முறைகள் நிறைய இருந்தன. நம் ஊரில் சூடம் ஏற்றுவது போல் இங்கு எல்லாம் ஊதுவத்தி கொளுத்துவது வழக்கம். ஒரு ஊதுவத்தி கொளுத்தி வைத்துவிட்டு ஹோட்டலுக்கு திரும்பினேன்.


வாட்நாம் சிலைகள்


மெழுகுவர்த்தி
பொதுவாகவே கம்போடியாவில் போக்குவரத்துக்கு அதிகம் நம்பியிருப்பது டுக் டுக் தான். சாரட் வண்டி போன்ற ஒரு அமைப்பு, அதன் ஒரு முனையில் ஒரு கொக்கி. குதிரைக்கு பதிலாக மோட்டார் வாகனம். மோட்டார் வாகணத்தில் ஒரு எக்ஸ்ட்ரா பிட்டிங். தேவைப்படும் பொழுது சாரட் வண்டியை மாட்டவும், கழட்டிவிடவும்.இதுதான் டுக் டுக். நான்கு முதல் ஆறு நபர்கள் அமரலாம். அதிகபட்சமாக 40 கிமீட்டர் வேகத்தில் செல்கிறார்கள். ஏர்போர்ட்டுக்கு செல்ல மகிழுந்தில் 12 டாலர். டுக் டுக்கில் செல்ல 7 டாலர் வசூலிக்கிறார்கள். இன்னொரு பயணவாகணம் இருக்கிறது. மோட்டார் வாகனம். மோட்டார் வாகனத்தின் சொந்தகாரர் ஓட்டிவருவார். நாம் பின்னாடி உட்கார்ந்துகொள்ளலாம். ஒரே ஒரு நபர் எங்காவது செல்லவேண்டும் என்றால் மோட்டார் வாகனம் தான் பெஸ்ட். செலவும் குறைச்சல். ஏர்போர்ட் செல்ல 5 டாலர் தான் வசூலிக்கிறார்கள். நாம்பென்னில் இருந்த 5 நாட்களிலும் பேருந்துகளை பார்க்கவே முடியவில்லை. ஆனால் ஒரு சில சாலைகளில் சிற்றுந்துகள்(மினி பஸ்) செல்கின்றது.

டுக் ‍- டுக்


கம்போடியாவில் மிகவும் ஆச்சரியப்பட்ட விசயம் மிகப்பெரிய சாலையில் கூட போக்குபோக்குவரத்து சிக்னல் விளக்குகள் இல்லை. மோட்டார் வாகனமாகட்டும், டுக் டுக் ஆகட்டும் அல்லது மகிழுந்தாகட்டம் ஒரு வித நளினத்துடன் வளைந்து நெளிந்து சாலைகளை கடந்து, அல்லது அடுத்த சாலைக்குள் செல்கிறார்கள். எவரும் அடுதவர் வண்டி தாண்டிசெல்வதற்காக நிறுத்துவதில்லை. ஒலி எழுப்புவதில்லை. அதற்கு மிகமுக்கிய காரணம் வண்டியின் வேகம் தான் என்று நினைக்கிறேன். 30 லிருந்து 40 கிமீ வேகத்திலே அனைத்து வாகனங்களும் செல்கின்றன. அதனால் அவர்களுக்கு அடுத்த வாகணத்தின் வேகம் திசை எல்லாம் ரொம்பவும் எளிமையாக கணிக்க முடிகிறது என்று நினைக்கிறேன்.



இரவு 9 மணி அளவில் மேக்காங் ஆற்றின் கரையோரம் ஒரு நடைபயனம் போய்விட்டு வரலாம் என்று நானும் இளங்கோவும் சென்றோம். இளங்கோ எங்களுடைய வியட்நாம் அலுவலகத்தில் இருந்து வந்திருந்தார். ஹோட்டலை விட்டு வெளியே வந்து வாட்நாமை சுற்றி நடந்தோம். சிறிது தூரம் நடந்ததும் "ஸ்லீப் வித் யூ" என்று ஒரு வரி காதில் விழுந்தது. திரும்பி பார்த்தால் இரண்டு பெண்கள் நின்று கொண்டிருந்தார்கள். பதில் பேசாமல் நடந்தோம். இளங்கோ கொஞ்சம் முன்னாடி போனதும் கெக்கே பிக்கே என்று சிரித்தார். அவரிடம் சிரிக்காதீர்கள், நம் சிரிப்பு சத்தம் அவர்கள் காதில் விழுந்தால் பிரச்சனையாகிவிடும் என்று சொன்னேன். அவர் அதனை காதில் வாங்கியது போல் தெரியவில்லை. மேக்காங்க் ஆற்றின் கரையோரம் பெரிய நடைபாதை கட்டிவைத்திருக்கிறார்கள். நடைபாதைக்கு ஒரு பக்கம் மேக்காங் ஆறு ஓடுகிறது. அடுத்த பக்கம் இரவு கேளிக்கை விடுதிகள் மற்றும் உணவு விடுதிகள் இருக்கின்றன. சிறிது தள்ளி அரண்மனை உள்ளது. ஆனாலும் வழி நெடுகிலும் பெண்கள் நின்று கொண்டு தான் இருக்கிறார்கள். திரும்பி வரும் பொழுது பாதை மாறி இரவு கேளிக்கை விடுதிகள் இருக்கும் தெருவழியாக வந்தோம். மேற்குலக  மக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். கேளிக்கை விடுதிகள் அனைத்தும் அவர்களால் நிறைந்து வழிகின்றது. மேலும் தெருவிலே பந்தல் போட்டு சேர் மற்றும் மைக் செட் வைத்து மதுபானம் அருந்திக்கொண்டிருக்கிறார்கள். அங்கேயும் மேற்குலக மக்களே அதிகம் இருக்கிறார்கள். இத்தனைக்கும் 'நாம் பென்' சுற்றுலா தளம் கூட கிடையாது. அங்கு அதிக பட்சம் சுற்றுலா தளமாக அரண்மனை, வாட்நம், மியூசியம், ஒரு கொலைக்களம் அவ்வளவுதான்.

அடுத்தநாள் சீதாவிடம் இங்கு தொழிலாலர்களூக்கு சம்பளம் எவ்வளவு என்று கேட்டேன். குறைந்தபட்சம் நூறு அதிகபட்சம் நூற்றைம்பது அமெரிக்க டாலர் என்றார். ஒரு மாதத்திற்கு சொல்லுங்கள் என்றேன். அவர் நானும் ஒரு மாதத்திற்கான சம்பளம் தான் சொல்கிறேன். இங்கு தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒரு நபருக்கு குறைந்த பட்சம் 100 அதிக பட்சம் 150 டாலர் தான் சம்பளம் என்றார். கடைசி நாள் ஒரு இந்திய உணவகத்துக்கு நேரில் சென்றேன். அவரும்  100 முதல் 125 டாலர் தான் சம்பளம் என்றார். இந்த ஊரில் அனைத்து விலைகளுமே டாலரில் தான் சொல்கிறார்கள்சில ஆசிய நாடுகள் போன்று இங்கும் வெளியே உணவு உண்ணும் முறை அதிகமாக தெரிகிறது. நூறு டாலர் எப்படி ஒருவருக்கு போதுமானதாக இருக்கும். மீதி தேவைகளுக்கு என்ன செய்வார்கள்வருமையின் காரணமாகவே பெண்கள் இரவு நேரத்தில் இப்படி வரிசையில் நிற்கிறார்கள் போலும் என்று நினைத்துக்கொண்டேன்..


மேலும் இங்கு ராபெரி கூட அதிகமாக இருக்கும் போல் தெரிகிறது. ஆங்கர் வாட் செல்லும் போது விமான நிலையம் செல்ல டுக் டுக் வாடகைக்கு எடுத்தேன். வண்டியில் ஏறியதும் முதுகு பையையும் என்னுடைய கேமரா பையையும் கழட்டி வண்டியில் வைத்தேன். வண்டியோட்டி என்னிடம் வந்து பையை திரும்ப மாட்டிக்கொள்ள சொன்னான். மேலும் கேமரா பையை கையில் கட்டியாக பிடித்துக்கொள் அல்லது யாராவது எடுத்துவிடுவார்கள் என்றான். அப்படி என்றால் ஓடுகின்ற வண்டியிலிருந்தே திருடும் வழக்கம் அங்கும் உள்ளது என்று தான் நினைக்கிறேன். இதற்கு கூட அவர்களுடைய குறைந்த வருமானமே காரணமாக‌ இருக்கலாம். ஆனால் 'நாம்பென்'னை விட ஆங்கர் வாட் அதிக பாதுகாப்பாக இருக்கும் என்று சீதா சொன்னார். அவர்களுடைய மிகப்பெரிய சுற்றுலா தளம் ஆங்கர் வாட் என்பதனால் கூட அது பாதுகாப்பானதாக இருக்கலாம்.

Sunday, August 2, 2015

கம்போடியா -1, நாம் பென் (Cambodia - Phnom Penh)

 அலுவலக வேலை நிமித்தமாக ஒரு வார காலம் கம்போடிய தலைநகரில் தங்கும் வாய்ப்பு கிடைத்தது.  கம்போடியா என்ற பெயரை கேட்டதும் உடனே நமக்கு நினைவுக்கு வருவது ஆங்கர் வாட் தான். இதுவரைக்கும் அதோட தலைநகர் பெயர் என்ன என்று கூட தெரியாது. வலைத்தளத்தில் தான் தேடினேன். Phnom Penh என்று வந்தது. எப்படி உச்சரிச்சாலும் தப்பாவே உச்சரிக்கிறமாதிரி இருந்தது. ரிஸ்க் எடுக்க வேண்டாம். நேரடியா கம்போடியா போய் அங்கேயே எப்படி உச்சரிக்கிறது என்று கேட்டுக்களாம் என்று முடிவு செய்திருந்தேன். இந்திய தூதரகத்தில் வேலை பார்க்கும் நண்பரிடம்  கம்போடியாவிற்கு ஒரு வார காலம் அலுவலக வேலை விசயமாக போக வேண்டியது இருக்கிறது என்றவுடன். "நாம் பென்" க்கா போகிறீர்கள் என்று கேட்டார். ஒகோ அந்த பெயரை இப்படித்தான் உச்சரிக்கனுமா என்று நினைத்துக்கொன்டே வெளியே காண்பித்துக்கொள்ளாமல் ஆமாம் அங்கேதான் போகிறேன் என்று சொல்லிவிட்டேன். 
'நாம் பென்' விமான நிலையம்


 ஒரு ஞாயிறு மதியம் 'நாம் பென்' விமான நிலையத்தில் போய் இறங்கியாகிவிட்டது. இந்தியர்களுக்கு அங்கு போய் இறங்கியதும் கடவு சீட்டு(விசா) வாங்கும் வசதியிருக்கிறது. 30 அமெரிக்க டாலர். 30 நாட்கள் தங்குவதற்கு அனுமதி கொடுக்கிறார்கள். சன்வே ஹோட்டலில் தான் தங்க வைக்கப்பட்டிருந்தேன். நேர் எதிராக பச்சை பசேல் என்று அமேரிக்க தூதரகம். நான்கு மூலையிலும் துவாரபாலகர்கள் நின்று கொண்டிருந்தார்கள். எந்த நாட்டில் சென்று அமெரிக்க தூதரகத்தை பார்த்தாலும் இந்த காட்சி மட்டும் மாற்றம் இருக்காது என்று நினைக்கிறேன். உள்ளே நிறைய பனை மரம் அதுவும் முறையாக வளர்தது போன்று கட்டம் போட்டு அதற்குள்ளே இருந்தது. பனைமரம் உயரமாக வளரக்கூடிய மரம். மழை பெய்து மின்னல் தாக்கினால் உடனே தீ பற்றி எரியக்கூடியது. அதனால் ஊருக்குள் பனைமரம் வளர்க்கும் வழக்கம் தமிழகத்தில் கிடையாது. ஆனால் கம்போடியாவில் எங்கெங்கு நோக்கினும் பனைமரம் கண்ணுக்கு தெரிந்தது.பக்கத்திலே ஒரு பகோடா. உயரமாக இருந்தது. ஒரு முறை போய் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்துகொண்டேன்.
அடைமழைக்கு முன்னர்

 ஏற்கெனவே அங்கு தங்கியிருந்த அலுவலக நண்பர்கள் பிற்பகல் 2 மணிக்கு ரஷ்யன் சந்தைக்கு அழைத்து செல்வதாக சொல்லியிருந்தார்கள். அடை மழை பெய்ததால் புறப்படுவதற்கு 4 மணி ஆகிவிட்டது. கன்னடியன் வங்கியில் வேலை செய்யும் உள்ளூர் நண்பர் சீதா எங்களை தன்னுடைய மகிழுந்துல் அழைத்துசென்றார். சீதா என்ற பெயரை அவரோட தாத்தா பாட்டி தேர்ந்தெடுதார்களாம். கம்போடிய மக்கள் நிறைய இந்திய பெயர் சூட்டுகிறார்கள். ஹோட்டல் ரிசப்சனிஸ்ட் பெயர் கூட ஷிவா. முப்பது சதவிகித மக்களின் முகங்கள் கிட்ட தட்ட தமிழர்கள் முக அமைப்பிலே இருக்கிறது. போகும் வழியில் ஒரு  பெண்மனியின் சிலை நின்று கொண்டிருந்தார். ரொம்பவும் புகழ்வாய்ந்த பெண். இவரோட பெயர் பென்(Penh) என்றார். அதற்கு மேல் அவருக்கு விபரம் தெரியவில்லை. ஒருவாரம் கழித்து ஆங்கர் வாட்டில் என்னுடைய வழிகாட்டி ஒருவர் அதனை விவரித்தார். மகிழுந்து ரஷ்யன் சந்தைக்கு செல்லுவதற்குள் பென் விவகாரம் என்ன என்று பார்த்துவிட்டு வந்துவிடுவோமா!


 14 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தற்பொழுதைய  ‘நாம் பென்’ தலைநகராக இல்லை. சிற்றூராக இருந்திருக்கலாம். அங்கு ஒரு வசதிபடைத்த, நல்ல பெயரெடுத்த ஒரு பெண்மனி இருந்திருக்கிறார். அவருடைய பெயர் பென்(Penh). சுற்று வட்டார மக்கள் அவர் சொல்லுக்கு மறு பேச்சு பேசுவதில்லை. ஒரு நாள் மேக்காங் ஆற்றுப்பகுதியில் சென்றுகொண்டிருந்த போது பரந்து விரிந்த அரசமரம் ஒன்றின் நடுவே வெண்கலத்தால் ஆன நான்கு புத்தர் சிலைகளை கண்டெடுத்திருக்கிறார். இதனை மலை போன்ற உயர்ந்த இடத்தில் வைத்து பூஜை செய்ய வேண்டிய சிலைகள் என்று முடிவெடுத்த பென், மனித சக்தியை கொண்டு சிறிய குன்றை செயற்கையாக உருவாக்கி அதன் மீது கோவிலை கட்டி வைத்திருக்கிறார். அந்த கோவிலோட பெயர் 'வாட் நாம்'. கம்போடிய மொழியில் வாட் என்றால் கோவில், நாம் என்றால் குன்று என்று அர்த்தம்.
'வாட் நாம்' - Wat Phnom


  15ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசியல் உட்பூசல் மற்றும் அண்டை நாடுகளிடையேயான தொடர்ந்த சண்டையின் காரணமாக 'கமிர்' அரசாங்கமானது தன்னுடைய தலைநகரை சிம் ரிப்(ஆங்கர் வாட்)ல் இருந்து வேறு இடத்திற்கு மாற்றும் பொழுது தேர்ந்தெடுத்த இடம் தான் தற்பொழுதைய நகரம். அவர்கள் லேடி பென்னிற்கு மரியாதை செய்யும் விதமாக தற்பொழுதைய நகருக்கு "நாம் பென்" என்ற பெயர் வைத்து, அந்த இடத்தை தலைநகராக கொண்டு இன்னும் ஆட்சி செய்துகொண்டிருக்கிறார்கள். கம்போடியர்கள் அவரை பாட்டி பென் (Daun Penh) என்று அழைக்கிறார்கள்.  அவருடைய சிலையை 'வாட் நாம்' பகோடாவிற்கு நேர் எதிரெ அதை நோக்கி பார்த்துக்கொண்டிருக்கும் வண்ணம் வைத்து வழிபடுகிறார்கள்.
'பென்' பாட்டியின் நினைவிடம்


பாட்டி 'பென்'

ரஷ்யன் சந்தைக்கு போய் சேரும் பொழுது மணி நான்கரை. சென்னையில் இருக்கும் ரிச்சி ஸ்ட்ரீட் மாதிரி கொச கொச என்று இருந்தது. ரஷ்யன் சந்தை என்றதும் ரஷ்யன் பொருட்கள் எல்லாம் கிடைக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் உள்ளூர் பொருட்கள் மட்டுமே கிடைத்தது. பெயர் மட்டும் ரஷ்யன் சந்தை என்று இருக்கிறது. கம்போடியாவில் இருக்கும் சந்தைகளிலே பெரிய சந்தை இது தான் என்றார்கள். இங்கிருந்தே மொத்த கொள்முதல் எடுத்து மற்ற ஊர்களுக்கு செல்லுமாம். அனைத்தும் தரமாகவும் மலிவாகவும் கிடைக்கிறது. பேரம் பேசவேண்டும்.

 முக்கியமான விசயம் சொல்ல மறந்துவிட்டேன். கம்போடியாவில் இரண்டு பணப் பரிமாற்றம் (டுயல் கரன்ஸி) உபயோகத்தில் இருக்கிறது. ஒன்று கம்போடியாவின் சொந்த பணம். அதன் பெயர் ரியல்(Riel). அடுத்தது அமேரிக்காவின் டாலர். கிட்டத்தட்ட உள்ளூர் பணம் போன்றே கொடுக்கல் வாங்கலில் உபயோகிக்கிறார்கள். ஒரு அமெரிக்க டாலருக்கும் குறைவாக இருந்தால் மட்டுமே ரியலில் கொடுக்கிறார்கள். ஒரு அமெரிக்க டாலருக்கு குத்துமதிப்பாக நான்காயிரம் ரியல் என்ற மதிப்பில் பணப்பரிவர்தனை நடக்கிறது. ரியலின் குறைந்த பட்ச பண மதிப்பே 100 தான். இங்கு நாணயம் உபயோகத்தில் இல்லை.

 மீண்டும் ரஷ்யன் சந்தைக்கே வருவோம். 5 மணிக்கே எல்லா கடையும் அடைக்க ஆரம்பித்துவிட்டார்கள். விசாரித்தால் கம்போடியா முழுவதுமே காலை ஏழரை முதல் மாலை ஐந்து மணிவரைக்குமே கடைகள் திறந்திருக்குமாம். அதன் பின்னர் உணவுக்கடைகள் மற்றும் இரவு கேளிக்கை விடுதிகள் மட்டுமே திறந்திருக்கின்றன. வேறு எங்கு செல்லலாம் என்று கேட்டால் யாருக்கும் எதுவும் தோன்றவில்லை. சுற்றுலா இடங்கள், கடைகள் எல்லாம் 5 மணிக்கே மூடினால் எங்கு தான் செல்வது. கடைசியாக கம்போடியாவின் மிகப்பெரிய அங்காடி (AEON shopping mall) செல்லலாம் என்று ஒருமித்த முடிவு எடுத்து அங்கு சென்றோம். மிகப்பெரிய அங்காடி, கம்போடிய ஜப்பானிய கூட்டுறவில் உருவானது. பசிபிக் ஆசிய பகுதியில் உள்ள நாடுகள் அனைத்திலும் ஜப்பான் தன்னுடைய சந்தையை இப்படி பரப்பி இருக்கிறது. சிறிது நேரம் சுற்றிபார்த்துவிட்டு  ஹோட்டல் திரும்பி ஓய்வெடுக்க ஆரம்பித்தோம்.